Pages

Wednesday, December 14, 2011

மெதுவான எளிய வாழ்க்கை !

வாழ்க்கை எளிதானது அல்ல . ஆனால் ,எளிய வாழ்க்கை என்பது அழகானது ,ஆனந்தமானது ,அன்பானது ,நிறைவானது . ஆடம்பரமிக்க ,பரப்பான ,வேகமான வாழ்கையை நோக்கியே நாம் தள்ளப்படுகிறோம் . எலிக்கதை ஒன்று சொல்வார்கள் " ஒரு ஊருல ஆயிரக்கணக்கான எலிகள் ஒரு தெருவில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன .அந்தத் தெருவுல இருந்த வீட்டிலிருந்து ஒரு எலி எட்டிப்பார்த்து "எல்லோரும் எங்க போறீங்க " என்று கேட்டது .அதுக்கு தெருவுல போன ஒரு எலி, " எனக்குத் தெரியாது .எல்லோரும் போறாங்க நானும் போறேன் " என்று சொல்லிவிட்டு தொடர்ந்து ஓடியது . அந்தக்கூட்டத்தில் அந்த வீட்டு எலியும் சேர்ந்து கொண்டது " . அந்த வீட்டு எலியின் மனநிலையில் தான் நாம் இருக்கிறோம் .

பெரும்பாலான நேரங்களில் நம்முடைய வாழ்க்கை நம் கைகளில் இல்லை . சமூக அங்கீகாரம் தான் பெரிதாக பார்க்கப்படுகிறது .புகழ் மிக்க வாழ்க்கை எல்லோருக்கும் சாத்தியமில்லை . புரிந்துகொள்ளும் மனநிலை நமக்கில்லை . எந்நேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் பவனி வரும் புகழ் மிக்க மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் இழப்பவை  ஏராளம் . சாதாரண மனிதர்களைப் போல அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியாது . புகழின் அளவைப் பொருத்து அவர்களுக்கு மனநெருக்கடி இருக்கும் .இந்த மனநெருக்கடியை சமாளிப்பவர்கள் புத்திசாலிகள் .எந்தத் தனி மனிதனையும் கடவுளாகவோ ,தலைவனாகவோ கொண்டாடக்கூடாது . நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே தலைவர்கள் ,கடவுள்கள் .

எல்லோருக்கும் ஒரே ஒரு வாழ்க்கை தான் . பணக்காரர்களுக்கும் ஒரு வாழ்க்கை தான் .புகழ் மிக்கவர்களுக்கும் ஒரு வாழக்கை தான் . ஏழைகளுக்கும் ஒரு வாழ்க்கை தான் . எல்லோருடைய வாழ்க்கையும் மரணத்தின் முன் சமம் . பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கை தான் எல்லோருக்கும் . உயிரினங்களின் பிறப்பு என்பது ஒரு மலர் மலர்வது போல எங்கும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது . கிராமத்தில் வசிப்பவர்கள் , விதவிதமாக நிகழும் மரணங்களை  மிக நெருக்கமாக நேரடியாக உணருகிறார்கள் கூடவே வாழ்வின் நிலையாமையையும் . மரணம் காற்றைப்போல எங்கும் நிறைந்திருக்கிறது .

எளிய மனிதர்களையும் ,எளிய வாழ்க்கையையும் கவனத்தில் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம் . சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை அவ்வளவு அழகானது , மகிழ்ச்சியானது . சரி ,சுற்றுப்புறத்தை மறந்து நீங்கள் கடைசியாக எப்போது வாய்விட்டு சத்தம் போட்டு சிரித்தீர்கள் ? யோசிக்கிறோம் . ஆனால் , அவர்களுக்கு இது தினமும் சாத்தியம் . சிரிக்க மறந்து இயந்திரம் போலவே வாழ்கிறோம் . நாலு பேர் ,நாலு பேர் என்று சதா புலம்பிக்கொண்டு நமக்காக வாழாமல் நாலு பேர் முன்னாடி பேர் வாங்கவே வாழ்கிறோம் .

எளிய மனிதர்கள் ,எளிய மனிதர்களோடு வெகு எளிதில் நெருக்கமாகி விடுகிறார்கள் .பிச்சைக்காரர்கள் ,பிளாட்பாரவாசிகள் ,குப்பை பொருக்குபவர்கள் ,வீட்டுவேலை செய்பவர்கள் ,கூலித் தொழிலாளிகள்  இவர்களின் வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள் உண்மை புரியும் .நாம் ,சக மனிதர்களிடம் நாலு வார்த்தைகள் பேசுவதற்குக் கூட  எப்போதும் தயங்கிக் கொண்டே இருக்கிறோம் . இன்றைய நிலையில்  தினமும் சந்திக்கும் மனிதர்களிடம் நாலு வார்த்தைகள் பேசுவது தான் நாம் செய்யும் பெரிய  சேவை .இயல்பாக பேசுவதற்கும் ,சிரிப்பதற்கும் கூட யோசிப்பது கொண்டே இருப்பது என்ன மாதிரியான வாழ்க்கை ?

மூன்று தலைமுறைகளுக்கு மேல் யாரும் தொடர்ந்து பணக்காரனாகவோ  ஏழையாகவோ  இருந்ததில்லை . ஒரு சிலரைத் தவிர இது எல்லோருக்கும் பொருந்தும் .வாழ்வின் நிலையாமையை உணராமல்  சமூக அங்கீகாரம் ,சமூக அங்கீகாரம் என்று சொல்லிக்கொண்டு தெரிந்தோ தெரியாமலோ நிறைய பணம் ,சொந்த வாகனம் ,சொந்த வீடு என்று சேர்க்கவே விரும்புகிறோம் . சமூகத்தின் எந்த மட்டத்தில் வாழ்ந்தாலும் நமக்கான நிம்மதிக்கும்  ,மகிழ்ச்சிக்கும் நாம் மட்டுமே காரணம் .

எளிய வாழ்க்கை பற்றிச் சிந்திப்பவர்களுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம் ,தோல்வி அடைந்தவன் ,பணம் சேர்க்க வக்கில்லாதவன் , ஆடத் தெரியாதவன் (ஆடத் தெரியாதவனுக்குத் தான் தெரு கோணல் !) .தனது உழைப்பின் மூலம் தனக்குத் தேவையான உணவைத் தானே தேடி உண்ணும் எல்லா உயிரினங்களும் ( மனிதர்களும் )  வெற்றியாளர்கள் தான் . பணத்தை வைத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டாம் .

சுய புலம்பல் :
மெதுவான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன் . எந்நேரமும் வேகமாகவும் பரபரப்பாகவும் இருப்பது பிடிக்கவில்லை .பெரும்பாலும்  நடந்து செல்லவே விரும்புகிறேன் ,தேவைபட்டால் மட்டும் வாகனத்தின் உதவியை நாடுகிறேன் . டவுன் பஸில் போகவே பிடிக்கிறது . ஒரு குறிப்பிட்ட சாதனைக்காக ,வெற்றிக்காக வாழ்க்கையை இழக்காமல் ஒவ்வொரு நாளாக வாழ விரும்புகிறேன் .

இந்த சிந்தனை இப்படியே தொடருமா ? அல்லது காலம் எனது சிந்தனையை மாற்றியமைக்குமா ? தெரியாது . எப்படி இருந்தாலும் காலத்தின் விளையாட்டை விடாமல் ரசிக்கிறேன் .யாராலும் ஆற்றமுடியாத அத்தனை துயரங்களையும் ஆற்றும் வல்லமை காலத்திற்கு மட்டுமே உண்டு . வருடங்கள் ஓடுகின்றன . ஆனால் ,காலம் மாறவில்லை . பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும்  ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் தான் இன்றும் ஒரு நிமிடத்திற்கு அறுபது நொடிகள் தான் . மின்சாரமோ ,கான்கிரிட் வீடோ , நல்ல சாலையோ ,வாகனமோ,துரித உணவோ , சோப்போ ,பற்பசையோ ,அரிசி உணவோ  இல்லாமல் இயற்கையையும் தனது உழைப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்த நம் முன்னோர்களின் ஒவ்வொரு நாளும் இருபத்து நான்கு மணி நேரங்களிலானது . இன்றைய நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அதே இருபத்து நான்கு மணி நேரங்களிலானது தானே . 

அடுத்த நொடி இந்த உலகம் தரப்போகின்ற அற்புதங்களும் ஆச்சரியங்களும் ஏராளம் !

மேலும் படிக்க :

உண்மையான கொண்டாட்டம் ! 

கண்ணீர் துளி - மனிதத்தின் சுவாசம் 

எது நிரந்தரம் ? 

வாழ்க்கை ஒரு போராட்டம் ! 
......................................................................................................................................................................   

No comments:

Post a Comment