Saturday, March 22, 2014

விவசாயமும் கிராமமும் தொலைக்காட்சியும் !

விவசாயம்,விவசாயி குறித்து யாரும் எந்த நிகழ்ச்சியும் தயாரிக்கவோ ,ஒளிபரப்பவோ முன்வருவதில்லை. வெள்ளித்திரை, சின்னத்திரை மனிதர்கள் மட்டுமே பல்வேறு விதமான நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றனர். இதுவும் ஒருவிதமான தீண்டாமை தான்.இன்றைய சமூகத்தில் மிகப்பெரிய தீண்டாமையைச் சந்திப்பது விவசாயமும், விவசாயியும் தான். "தன் மகன்(ள்) ஒரு விவசாயி ஆக இருப்பதில் தான் பெருமை " என்று பெற்றோர்கள் நினைக்கும் நிலை உருவாகும் வரை விவசாயம் என்பது தீண்டத்தகாததாகவே இருக்கும் . இதை மாற்ற வேண்டியது யாருடைய கடமை?

சமூகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் 70 % திரைப்படங்கள் விவசாயம் குறித்தோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்தோ , அதில் ஈடுபடும் மனிதர்கள் குறித்தோ இருக்க வேண்டும் . ஆனால், இங்கு, விதவிதமான காதல்கள் தவிர தமிழ் சினிமாவில் என்ன இருக்கிறது.


 இந்தியாவின் ஆன்மா, இன்னமும் கிராமங்களில் வாழ்வதாகச் சொல்கிறார்கள் . ஆனால் , எல்லாத் தரப்பினராலும் கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன . ஆட்சியாளர்களும் ,அரசியல்வாதிகளும் " கிராமம் " என்ற வாரத்தையை மறந்தும் உச்சரிப்பதில்லை . சமீபத்தில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டன . ஒரு தேர்தல் அறிக்கையில் கூட கிராமம் என்ற வாரத்தையே இல்லை . இந்தியாவில் கிராமங்கள் என்பதே இல்லையா ? இதுல காந்திய தேசம் ( கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு - காந்தி ) என்ற பெருமை வேறு .

கிராமிய கலைகளை மையமாக வைத்து ஒரே ஒரு நிகழ்ச்சி நடத்தக் கூடாதா ! சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சினிமாப் பாடல்களைப் பாடவும் , சினிமாப்பாடல்களுக்கு ஆடவும் வைக்கிறீர்களே .பாடத் தெரியாதவர்களுக்கு பாடச் சொல்லிக்கொடுத்தும் , ஆடத் தெரியாதவர்களுக்கு ஆடச் சொல்லிக்கொடுத்தும் நிகழ்ச்சிகள் நடத்துகிறீர்களே . ஏன்  கிராமியக் கலைகளை கற்றுக் கொடுத்து ஒரு நிகழ்ச்சியாவது நடத்தக் கூடாது ? தமிழ்நாட்டில்  சினிமாவைத் தவிர எதுவுமே  இல்லையா !

 இயல் ,இசை , நாடகம் என்று மூன்று தமிழ் உண்டெனச் சொல்கிறார்கள் .   இயல் என்பது இன்றைய இலக்கியம் , நாடகம் என்பது இன்றைய சினிமா , இசை என்பது ?  சினிமா இசை தான் தமிழிசையாக மாறிப் போய்விட்டது .சினிமாப் பாடல் தவிர்த்து , ஒரு புதிய பாடலை உருவாக்கி பாடும் வகையில் போட்டிகள் நடத்தலாம் . புதிய வகை நடனப் போட்டிகள் வைக்கலாம் . நல்ல இசைக்கானப் போட்டிகள் நடத்தலாம் . அதை விடுத்து வெறும் சினிமாப் பாடல்களைப் மட்டுமே பாடவும் , ஆடவும் வைத்துக்கொண்டு மார்க் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் .இதுல சீசன் 1,2,3,4,5,6,7,8 வேறு .
 சினிமா ஸ்டுடியோ சென்னையில் இருக்கலாம் . அதற்காக நகர மக்களுக்காக மட்டுமே நீங்கள் நிகழ்ச்சிகள் தயாரிப்பீர்களா !

தமிழ்நாடு முழுக்க கடுமையான  வறட்சி நிலவும் இன்றைய சூழலில் , அன்றன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் சோதனையாக இருக்கும் நிலையில் " ஒல்லி பெல்லி " குறித்தெல்லாம் கவலை இல்லை . எங்கள் பகுதிகளில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை . விவசாயம் நன்றாக நடைபெற்றால் மட்டுமே எல்லோருக்கும் வேலை கிடைக்கும் . வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை  உள்ளது உள்ளது .சற்று இளைப்பாற தொலைக்காட்சியை நாடினால் அது தொல்லைக்காட்சியாக இருக்கிறது .குறிப்பாக இந்த செய்தி சேனல்கள் பக்கமும் , ஆளாளுக்கு தீர்ப்பு சொல்ற சேனல்கள் பக்கமும் எட்டிப் பார்க்கக் கூட முடியவில்லை . இடையில இந்த சீசன்கள் வேறு . அதனால் பெண்களுக்கு , வன்முறைக் காட்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நெடுந்தொடர்கள் . ஆண்களுக்கு , நேரத்தை விழுங்கும் கிரிக்கெட் ! தான் பொழுதுபோக்கு . நெடுந்தொடர்களிடமிருந்து பெண்களையும் , கிரிக்கெட்டிடமிருந்து ஆண்களையும் காப்பாற்றுங்கள்.

நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடுத்து " கண்டிப்பாக ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் வாரத்தில் ஒரு மணி நேரமாவது வார இறுதி நாட்களில் மாலை 6 முதல் 10க்குள் விவசாயம், கிராமம் , கிராமம் சார்ந்த கலைகள் ,நிகழ்ச்சிகளாக ஒளிபரப்ப வேண்டும் " என்று தீர்ப்பு தான் வாங்க வேண்டும் போல ...!

(  இந்தப் பதிவு , என்னால்  முகநூலில் எழுதப்பட்ட இரண்டு கருத்துரைகளின்  தொகுப்பு )

மேலும் படிக்க :

 ஆக்காட்டி ஆக்காட்டி ! 
                                                                                                                                        
சினிமா - கிரிக்கெட் - இந்தியா ! 

MGR அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் !

...................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms