Wednesday, May 17, 2017

லென்ஸ் !

ஒரு சென்ஸிடிவான விசயத்தை எடுத்துக்கொண்டு அதை பிரச்சார நெடியில்லாமல் திரைப்படமாக எடுப்பது நம் சூழலில் அவ்வளவு எளிதானதில்லை. இதே திரைப்படம் பிரச்சார நெடியுடன் கருத்து சொல்வது போல எடுக்கப்பட்டிருந்தால் இந்த திரைப்படமும் பத்தோடு பதினொன்றாக மாறியிருக்கும். ஆனால் இத்திரைப்படம் நம்மை சுயவிசாரனைக்கு உட்படுத்துகிறது. ஆழ்மன வக்கிரங்களை , அதனால் மற்றவர்களுக்கு உருவாகும் பாதிப்புகளை மிக அழுத்தமாக பேசுகிறது. நாம் மிக எளிதாக கடந்து செல்லும் விசயத்தில் நிறைந்திருக்கும் அகச்சிக்கல்களை நுட்பமுடன் பதிவு செய்கிறது.

தற்போதைய சூழலில் இது மாறுபட்ட திரைப்படம்.  ஏனென்றால் இத்திரைப்படத்தின் உள்ளடக்கம் தான் பேசுபொருளாக இருக்கிறது. இதுவரையான விமர்சனங்கள் , நடிகர் , நடிகைகளைப் பற்றியோ , இசை , ஒளிப்பதிவு குறித்தோ ஏன் இயக்கம் குறித்தோ கூட இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. அந்த அளவிற்கு இத்திரைப்படத்தின் உள்ளடக்கம் நம்மை பாதித்திருக்கிறது.

பிரபல இயக்குனர் , நடிகர் , நடிகைகள், பிரமாண்டம் என எதுவும் இல்லாமலேயே ஒரு சிறந்த படத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. ஒரு திரைப்படத்தின் திரைக்கதையும் அது எடுக்கப்பட்ட விதமும் சரியாக இருந்தால் மற்ற எந்த விசயங்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்பதும் மீண்டுமொருமுறை நிரூபனமாகியுள்ளது.
இத்திரைப்படத்தின்  வசனங்கள் , திரைப்படத்தை விட்டு விலகிச்செல்லாமல் நம்மை கட்டிப் போடுகின்றன. இவ்வளவு சிக்கலான கதைக்குள்ளும் மனிதத்தன்மையை நிலைநிறுத்தியிருப்பது பாராட்டிற்குரியது. முதலில் இப்படி ஒரு கருவை எடுத்துக்கொண்டு படமாக எடுப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும். படத்தை இயக்கியதோடு, வசனம் எழுதி மற்ற நடிகர்கள் நடிக்கத் தயங்கும் கதாப்பாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார் , இயக்குனர். 

மனிதக் கண்களிலும் லென்ஸ்கள் உள்ளன. கேமாரக் கண்களிலும் லென்ஸ்கள் உள்ளன. மனித லென்ஸால் பார்க்கப்படுபவை தனிமனிதர் சார்ந்தது. அதை நம் மூளை மட்டுமே பதிவு செய்கிறது. நம் மூளை பதிவு செய்ததை மற்றொருவர் பார்க்கும் அளவிற்கு இன்னும் அறிவியல் முன்னேறவில்லை. ஆனால் கேமராக் கண்களால் பதிவு செய்ததை இன்னொருவர் மிக எளிதாக பார்க்கலாம். அதுவும் இந்த தொடுதிரை வாழ்வில் , மொபைல் போன் வடிவில் கைகளில் , பாதுகாப்பு என்ற பெயரில் கடைகளில் , பொது இடங்களில் என கேமராக்கள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. நாம் இதிலிருந்து தப்பிக்க முடியாது.
நாம் பயன்படுத்தும் நவீன சாதனங்களில் பெரும்பாலானவை தனிமனிதரின் அந்தரங்கங்களை எளிதில் திருடும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. நம்மைப் பற்றிய தகவல்கள் உலகின் எங்கோ ஒரு மூலையில் தொடர்ந்து சேகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த சூழலில் தான் இத்திரைப்படம் முக்கியமானதாகிறது.

சாத்தான்கள் (லென்ஸ்கள் ) நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கின்றன !
மலையாளத்தில் கடந்த ஆண்டே ( ஜூன் 2016 ) வெளிவந்துள்ளது. தமிழில் தாமதம் ஏன் என்று தெரியவில்லை?

மதுபானக்கடை, பேரை பார்த்தே படம் பார்க்காதவங்க நிறைய பேர் இருக்காங்க. அதுபோல இந்தப் படத்திற்கும் நிகழக் கூடாது. படம் எந்த திரையரங்கில் ஓடுது என்றே தெரியவில்லை. நாங்களே சிரமபட்டுத்தான் கண்டு பிடித்தோம். ' படம் திரில்லர் படமா ? லேடிஸ் ஆடியன்ஸ் இருக்காங்களா ?' டிக்கெட் கவுன்டரில் ஒரு பெண் விசாரித்து கொண்டிருந்தார். அவரது கேள்வியும் , அச்சமும் நியாயமானது. ஆனால் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் , பெண் இருபாலரும் பார்க்க வேண்டிய திரைப்படம் !

மேலும் படிக்க :



...................................................................................................................................................................


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms