Wednesday, April 5, 2017

ஊதாவும் ரோமும் !

கலை, மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது - திரையில் எம்.ஆர்.ராதா.
Blue is the warmest color - ஆண் -பெண் சேர்ந்து வாழும்போது எழும் சிக்கல்களை மையமாக வைத்து நிறைய திரைப்படங்கள் வந்துள்ளன. காதல் , கோபம் , உரிமை கொண்டாடுதல் , பூரிப்பு , கொண்டாட்டம் , பிரிவு , ஏக்கம் , கண்ணீர் போன்ற அனைத்தும் பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழும் போதும் நிகழும் என்பதை இத்திரைப்படம் முன்வைத்தது. பிடிக்கவில்லையென்றால் பிரிந்து போவதும் நிகழ்கிறது. ஆண் -பெண் உறவோ , பெண் -பெண் உறவோ பிரிந்து செல்லும் இருவரில் ஒருவர் வெகு சீக்கரமாக இயல்பான வாழ்விற்கு திரும்பி விடுகிறார். மற்றொருவரால் அவ்வளவு எளிதில் இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட முடிவதில்லை. அதையும் இத்திரைப்படம் வெளிப்படுத்தியது. இத்திரைப்படத்தில் வயதில் மூத்த பெண்ணிற்கும் (ஆண்களைப் போல குறைவான முடி கொண்ட ), இளவயது பெண்ணிற்கும் இடையே உறவு உருவாகிறது.இத்திரைப்படத்தில் நிர்வாண காட்சிகள் இருந்தாலும் அவை அழகியலுடன் உருவாக்கப்பட்டிருக்கும்.
Room in Rome - ஒரு இரவில் , ஒரே அறையில் உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்து எதேச்சையாக சந்தித்து கொண்ட இரு பெண்களுக்கு இடையான உரையாடல் ,அன்பு , காதல் , காமம்தான் திரைப்படம். இத்திரைப்படத்திலும் வயதில் மூத்த பெண் ஆணைப் போல குறைந்த முடி கொண்டவராகவே இருக்கிறார்.இதில் ஏதேனும் குறியீடு உள்ளதா என்று தெரியவில்லை. இத்திரைப்படத்தில் நிர்வாணமில்லாத காட்சிகள் வெகு குறைவு.ஆனால் அழகியலுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இசை பெரும் பலம். "Loving Strangers .. Loving Strangers , a hole in packet,all the money go away ( சரியாக தெரியவில்லை ) " என்ற பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியலை ..." என்ற பாடலை நினைவுபடுத்தியது.

நிர்வாணம் என்பது ஆபாசமல்ல கலை என்பது நம் முன்னோர்கள் வடித்து வைத்திருக்கும் சிற்பங்களைப் பார்த்தாலே புரியும். இப்படங்களைப் பார்த்தாலும் புரியும்.

ஒரே வாரத்தில் இரண்டு, உரையாடல்களை மையப்படுத்திய திரைப்படங்களை பார்த்தாகிவிட்டது. ஒன்று , Before Sunrise- எத்தேச்சையாக சந்தித்துக் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்குமான உரையாடல். மற்றொன்று , Room in Rome - எத்தேச்சையாக சந்தித்துக்கொண்ட பெண்ணுக்கும் பெண்ணுக்குமான உரையாடல்..

தமிழில் எப்போது இம்மாதிரியான உரையாடலை மையப்படுத்திய திரைப்படங்கள் வெளிவரும் என்று தெரியவில்லை.
கலை, மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும்...

மேலும் படிக்க :

..............................................................................................................................................................................

Friday, March 31, 2017

சவாலான வெற்றி !இந்திய கிரிக்கெட் அணி எப்போதுமே டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது . டெஸ்ட் போட்டிகளுக்கென்று தனிப்பட்ட திறமையாளர்கள் தொடந்து உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். 90 களுக்குப் பிறகு டிராவிட் , கும்ளே , லக்ஷ்மன் , ஹர்பஜன் , புஜாரா , அஸ்வின் என டெஸ்ட் போட்டிகளுக்கான தனித்த திறமையாளர்கள் தொடர்ந்து உருவாகிறார்கள். இவர்கள் , மற்ற வடிவ கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுத்தாலும் டெஸ்ட் போட்டிகளாலேயே நினைவுகூறப்படுகிறார்கள். காரணம் , இவர்கள் , டெஸ்ட் போட்டிகளில்  நீடித்த திறமையை வெளிபடுத்துவது தான். இவர்களுக்கு மற்ற வீரர்கள் ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும் போட்டிகளில் எளிதாக வென்று விடலாம்.

ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு இங்கிலாந்து தொடர் தான் கடினமானது என நினைத்துக் கொண்டிருந்தோம் . இங்கிலாந்து தொடர் கடினமாக இருந்தாலும் தொடரை இந்திய அணி முழுமையாக கைபற்றியது. ஆஸ்திரேலிய தொடரின் ஆரம்பமே இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலுமே நூத்திச் சொச்ச ரன்களுக்கு ஆட்டமிழந்து முதல் டெஸ்ட்ல் மோசமான தோல்வியைச் சந்தித்தது. சமீபத்திய தொடர்களில் முதன் முறையாக பேட்ஸ்மென்கள் , இரண்டு இன்னிங்ஸ்களிலும் சரியாக ஆடவில்லை. அதனாலேயே மோசமான தோல்வியைச் சந்தித்தது.

நம்பர் 1 அணியாக இருக்கும் இந்திய அணிக்கு இத்தொடர் கௌரவப் பிரச்சனையாக மாறியது. எப்படியாவது இந்த தொடரை வெனறால் மட்டுமே இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு பெருமை என்ற நிலை உருவாகியது. ஆஸ்திரேலியாவும் இந்த எதிர்பாராத வெற்றியின் மூலம் பெருமகிழ்ச்சி அடைந்தது. இந்தியாவில் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பாக இந்த தொடரை மாற்ற வேண்டும் என நினைத்தது. இதனால் இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக மாறியது.

பொதுவாகவே ஒரு டெஸ்ட் தொடரில் 0-1 என பின்தங்கிய நிலையில் அடுத்த டெஸ்டில் விளையாடுவது சவாலானது. மனஉறுதிடன் விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். முதல் இன்னிங்ஸ்ல் நூறு ரன்களுக்கும் மேலாக பின்தங்கியிருந்து டெஸ்ட் போட்டியை வெல்வது எப்போதும் நிகழாது. இந்த தொடரின் முக்கிய திருப்புமுனை இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்ல் நிகழ்ந்தது. புஜாரா - ரகானே இணைந்து சேர்த்த ரன்கள் முக்கியமானதாக மாறியது. 188 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதற்கு இந்திய அணியின் மனஉறுதியே காரணம். இரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையடைந்தது.

இந்நிலையில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டிலும் திருப்பங்கள் நிகழ்ந்தன. முதல் இன்னிங்ஸ்ல் ஸ்மித் , மேக்ஸ்வெல் சதங்களால் 450 ரன்களுக்கு மேல் எடுத்தது. மேக்ஸ்வெல் அதிக பந்துகளுக்கு தாக்குப்பிடித்த முதல் போட்டியாக இது அமைந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி புஜாரா -சகா இணைந்து சேர்த்த ரன்களின் உதவியுடன் 603 ரன்கள் எடுத்தது. புஜாரா இரட்டை சதமடித்தார். அடுத்து 152 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 63 /4 என தத்தளித்தது. ஷான் மார்ஷும் , கேன்ட்ஸ்கோம்ப் ம் ஆஸ்திரேலிய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினர். மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மூன்று போட்டிகள் முடிவிலும் தொடர் 1-1 என்றே தொடர்ந்தது.

சமீப காலங்களில் ஒரு டெஸ்ட் தொடர் இந்த அளவிற்கு கவனம் பெற்றது இந்த தொடரில் தான்.
ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு செசனும் நீயா ? நானா ? என்றே தொடர்ந்தது. விராட் கோலியைச் சுற்றி சரச்சைகளும் தொடர்ந்தன. காயம் காரணமாக கோலி விலகிய நிலையில் ரகானே தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய நான்காவது டெஸ்டில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தது. இடது கை சைனா மேன் பந்துவீச்சாளராக களமிறங்கிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் 30 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. குறிப்பாக ஸிமிதை புவனேஸ்வர் குமார் போல்டாக்கியது திருப்புமுனையானது. ஸிமித் மட்டும் போல்டாகவில்லை. அந்த இடத்திலிருந்து ஒட்டு மொத்த ஆஸ்திரேலிய அணியே போல்டானது போல 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 என கைபற்றியது.

கடந்த தொடர்களில் பெருமளவு ரன்களைக் குவித்த கோலியின் பங்களிப்பு இல்லாமலேயே இந்த தொடரை இந்திய அணி வென்றிருப்பது தான் சாதனை. அதே நேரத்தில் ரன் குவிப்பிற்கு ஸிமிதை மட்டுமே ஆஸ்திரேலிய அணி நம்பியிருப்பதும் தெளிவாக தெரிந்தது. இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணம் , வீரர்களின் கூட்டு முயற்சி தான். சுதந்திரமாக ஒருகிணைந்து விளையாடி வருவதன் மூலமே வீரர்களின் தனிப்பட்ட திறன்கள் வெளிப்படுகின்றன. ஒருவர் சரியாக விளையாடா விட்டாலும் மற்றொருவர் அதை சரிசெய்து அணியை சமநிலைக்கு கொண்டு வந்து விடுகிறார். அதனாலேயே நான்காவது டெஸ்ட்டில்  அணித்தலைவராக ரகானேவால் சிறப்பாக செயல்பட முடிந்தது.

இந்த தொடரில்  ராகுல் , புஜாரா , ஜடேஜா , உமேஷ் யாதவ் ஆகியோர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டனர். அஸ்வின் , விஜய் , ரகானே , சகா ஆகியோர் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டனர். அதிலும் ஜடேஜாவிடம் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. இந்த தொடருக்கு முன்பு வரை பேட்டிங்கில் அவ்வளவாக பங்களிப்பு செய்யாத ஜடேஜா இந்த தொடரில் முக்கியமான கட்டங்களில் சிறப்பான பங்களிப்பைச் செய்தார். அதுவுமில்லாமல் இந்த தொடரில் அதிக விக்கெட்களை கைபற்றியதும் அவர் தான். ராகுல், தொடக்க வீரராக தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடினார். புஜாரா, இரண்டு டெஸ்களில் பல பேர் வேலைகளை ஒற்றை ஆளாகச் செய்தார். இந்த தொடரில் வென்றதற்கு புஜாராவின் நேர்த்தியான ஆட்டம் முக்கிய காரணம்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முன்பை விட சிறப்பாக மேம்பட்டிருக்கிறது. இந்த தொடர் முழுவதுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் உமேஷ் யாதவ் ன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். இந்த தொடரில் உமேஷ் யாதவ் ன் பங்களிப்பும் முக்கியமானது. விக்கெட் கீப்பர் சகாவும் முக்கியமான கட்டங்களில் சிறப்பாக ஆடினார்.

மானப்பிரச்சனையாக மாறிப்போன இந்த தொடரில் வென்றதன் மூலம் உலகின் நம்பர் 1 அணி என்ற கௌரவத்தை தக்கவைத்துக் கொண்டது. கடந்த தொடர் வெற்றிகளை விட இந்த தொடர் வெற்றியே சவாலானது.

இந்த மாதிரியான தொடர்களே  டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் !
   

Saturday, February 11, 2017

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குப் பொன்னான வாய்ப்பு !

மத்தியிலும் சரி , மாநிலத்திலும் சரி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மகத்தான வாய்ப்பை காலம் வழங்கியிருக்கிறது. அதற்கு முதலில் முதன்மையான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேறுபாடுகளை பேசித்தீர்த்து ஒன்றிணைய வேண்டும். ஒரே கட்சியாக கட்சியின் கொள்கைகளை பரப்புரை செய்ய வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளை விட தாங்கள் எந்த விதத்தில் வேறுபடுகிறோம் என்பதை மக்களுக்குத் தெளிவாக புரிய வைக்க வேண்டும். மக்களுக்கான எல்லாப் போராட்டங்களிலும் கம்யூனிஸ இயக்கங்களே முன்னிருக்கின்றன என்பதை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் மீது நம்பிக்கையிழந்து தான் மக்கள், இந்துத்துவா கட்சி என்று தெரிந்தே தான் பாஜகவிற்கு வாக்களித்தார்கள்.மோடியின் குஜராத் மாடல் விளமபரமும் ஒரு காரணம். ஆனால் இனிமேல் அதிகாரத்தைக் கைபற்ற வாய்ப்பே பெறப்போவதில்லை என்ற மனநிலையில் தான் பாஜகவின் மோடி அரசின் செயல்பாடு இருக்கிறது. குஜராத் என்ற மாநிலம் குறித்து தற்போது ஒரு தகவலும் வெளியே வருவதில்லை. இந்நிலையில் காங்கிரஸ் , பாஜக இந்த இருகட்சிகளுக்கும் மாற்று எதுவும் தேசிய அளவில் புதிதாக உருவாகவில்லை ( ஆம்ஆத்மி இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் ). இந்த இருகட்சிகளையும் தவிர்த்து தேசிய அளவில் பல மாநிலங்களில் கிளைகள் உள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் உள்ளன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காகத்தான் உழைக்கிறார்கள்.ஆனால் இதுவரை மக்களை நெருங்கிச் செல்லவேயில்லை. இப்போதாவது நெருங்கிச் செல்ல வேண்டும். தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வேண்டும்.

அடுத்த மாற்றாக இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளும் வலுவில்லாமல் இருக்கின்றன. பெரும்பாலான மாநிலங்களில் மாநிலக்கட்சிகளில் உட்கட்சிபூசல் அதிகமாக உள்ளது. உதாரணம் , தமிழ்நாடு , உத்திரபிரதேசம் etc. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகப்பெரிய அரசியல் வெற்றிடம் இருக்கிறது. இதை கம்யூனிஸ்ட் கட்சிகள் நிரப்பினால் மக்கள் பயனடைவார்கள். இதை அம்பேத்கரின் வார்த்தைகள் மூலமாகவே நிறைவேற்ற முயலலாம். கற்பி , ஒன்றுசேர் , புரட்சி செய். மக்களை நெருங்கிச் செல்ல வேண்டும். மக்களை வாசிக்கப் பழக்க வேண்டும். பெரியாரையும் , அம்பேத்கரையும், மார்க்ஸையும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்திய மக்கள், மத்திய , மாநில அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சிகளால் தர முடியும். ஆனால் இது எளிதல்ல. மிகக்கடுமையாக உழைத்தால் மட்டுமே சாத்தியம்.
தமிழகத்தில் கம்யூனிஸ இயக்கங்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில் கடுமையாக உழைத்தால் வெற்றி சாத்தியம் தான். சமீபத்திய மெரினா போராட்டம் , மாணவர்களின் , மக்களின் கம்யூனிஸ ஆதரவு மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அதற்கு முதலில் இந்த இரு இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும். சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.திரைப்படங்களில் கடைசியாக 'சிவப்பு மல்லி ' திரைப்படத்தில் கம்யூனிஸக் கொடியை பார்த்ததாக ஞாபகம்.

தமிழகத்தில் கம்யூனிஸ ஆட்சி என நினைக்கும் போதே மனம் மகிழ்கிறது. இது நடக்குமா ? என்று தெரியவில்லை. நடந்தால் நன்றாக இருக்கும்.

எல்லாம் தோழர்களின் கையில் !
மீதி காலத்தின் கையில் !
மேலும் படிக்க :

கட்சி அரசியலை வேரறுப்போம் !

ஓட்டு வங்கி அரசியலை ஒழித்துக்கட்டுவோம் !

..................................................................................................................................................................


பணமதிப்பு நீக்கம் - மறைமுக தனியார்மயம் !இந்தியர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக தேசிய செய்தி , மாநில செய்தி , மாவட்ட செய்தி , வட்ட செய்தி , கிராம செய்தி என எல்லாமே ஒரே செய்தி 500 மற்றும் 1000 மட்டும் தான். தமிழகத்தின் முதல்வர் இறந்தது பற்றிய செய்திகள் ஒரு நாளுடனும் , மாநிலத் தலைநகரான சென்னையைத் தாக்கிய வார்தா புயல் பற்றிய செய்திகள் இரண்டு நாட்களுடனும் முடிந்துவிட்டது. பணமதிப்பு நீக்கம் பற்றிய கூச்சல் ,குழப்பங்கள் இன்னும் முடியவில்லை. அடித்தட்டு மக்களும் ,நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் ,தொழில், சேவை என நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்து நிற்கிறது. 35 நாட்களுக்குப் பிறகும் எந்த மாற்றமும் நிகழாத நிலையில் 50 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று மோடி மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

பொதுவாகவே சேமிப்பு பழக்கம் அதிகமுள்ளவர்களாக நாம் இருக்கிறோம். சிறுவாடு காசு என்ற பெயரில் ஆயிரங்களிலிருந்து இலட்சங்கள் வரை நம் வீடுகளில் இருப்பது இயல்பு. அதை மாற்றுவது கூட எளிதாக இல்லைஎனக்குத் தெரிந்து தற்போதைய தலைமுறை தான் சேமிப்புப் பழக்கம் குறைவாகவோ அல்லது சேமிப்பு பழக்கம் இல்லாத தலைமுறையாகவோ இருக்கிறது. ஊழலுக்கு எதிராகவும் , பெரும் பணக்காரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் குறித்தும் , பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் வரி சலுகைகள் குறித்தும், அரசு நிறுவனங்கள் சலுகை விலையில் விற்கப்படுவது குறித்தும் , முக்கிய துறைகளில் கூட அந்நிய முதலீட்டை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பது குறித்தும் கேள்விகள் கேட்கும் நடுத்தர வர்க்கம் தான் கட்டம் கட்டப்படுவதாகத் தெரிகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் சாதக ,பாதகங்களை ஆராயாமல் திடீரென ஒரு முடிவை அறிவிப்பது ஜனநாயாகத்திற்கு விரோதமானது. ஆள்பவர்களின் சர்வாதிகார மனநிலையையே இது வெளிப்படுத்துகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் உழைத்துச் சேர்த்தப் பணத்தைக் கூட வங்கிகளிலிருந்து எடுக்க முடியாமல் இன்று வரை பாமர மக்கள் தவிக்கின்றனர். வங்கிக் கிளைகளில் ,  ஏடிம் மையங்களில் மணிக்கணக்கில் , நாள்கணக்கில் காவல்காரர்களின் அடக்குமுறைகளையும் தாண்டி வரிசையில், வெயிலில் நின்றாலும் 2000 மோ, 2500 யோ தான் கிடைகிறது. இப்படி , மக்கள் இதுவரை வங்கிகளில் போட்ட பணத்தையே இன்னும் எடுக்க முடியவில்லை. இதில்  பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆலைகள், கூலித் தொழிலாளர்களுக்கு அவசரம் அவசரமாக வங்கிக் கணக்குகளை தொடங்கி ஊதியத்தை அந்தக் கணக்குகளில் செலுத்தி அவர்களை வங்கிகளில் காத்திருக்க வைக்கின்றனர். இதே ஆலைகள், அரசு செல்லாது என அறிவித்த பிறகும் கடந்த நவம்பர் மாத ஊதியமாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளையே கொடுத்தார்கள். டிசம்பர் மாதமும் ஒரு சில ஆலைகள் செல்லாது என அறிவித்த நோட்டுகளை வழங்குகின்றன. மீதி ஆலைகள் வங்கிகளில் செலுத்துகின்றன. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் நிலைமையே இப்படி என்றால் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலைமை இதைவிட மோசம்.

பணமில்லா பரிவர்த்தனைக்கு தேவையான கட்டுமானங்களை உருவாக்காமல் எல்லோரையும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறச் சொல்வது, முட்டாள்தனம். இந்த உயர் பணநீக்க நடவடிக்கைக்குப் பிறகு வெளிவந்து கொண்டிருக்கும் பணப் பரிவர்த்தனை தொடர்பான விளம்பரங்களை சாதாரணமாக கவனித்தாலே தெரியும். ஏறக்குறைய அனைத்துமே தனியார் விளம்பரங்கள் . அரசு வங்கி ஏடிம் மையங்களை விட , தனியார் வங்கி ஏடிம் மையங்களில் தொடர்ச்சியாக பணம் நிரப்பப்படுவதன் பின்னணி என்ன ? மோடி அரசின் இந்த நடவடிக்கைகளால் அதிகம் பயனடையப் போவது தனியார் நிறுவனங்கள் தான். இந்த நடவடிக்கைக்குப் பின்னால் பெரிய அளவிலான வணிக நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. அடுத்ததாக பணமில்லா பரிவர்த்தனையைத் தீவிரமாக அமல்படுத்துவதற்கு அதிக அளவிலான பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் தேவை . இன்னும் பல கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குகளே இல்லை. வங்கிக் கணக்கு இருந்தாலும் ஏடிம் கார்டு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம். கிரடிட் கார்டுகள், ஏடிம் கார்டுகள் , பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் இல்லாத நிலையில் எப்படி பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுவது ?

தற்போதைய சூழலில் பழைய 500, 1000 நோட்டுகளைப் போலவே தயாரிக்கப்பட்ட கள்ளப்பணம் ஒழிந்துவிடும். ஆனால், புதிய 500,2000 நோட்டுகளை போலவே புதிதாக கள்ளப்பணம் தயாரிக்கப்பட்டுவிடும். கருப்புப்பணம் ஒழிந்த மாதிரியே தெரியவில்லை. பலவிதமான நூதன முறைகளில் பெரும்பான்மையான கருப்புப்பணம் மாற்றப்பட்டுவிட்டது. கள்ளப்பணம் , கருப்புப்பணம் இரண்டையும் கட்டுப்படுத்த பணமில்லா பரிவர்த்தனையே ஓரளவிற்கு சரியான தீர்வாக அமையும். ஆனால் அதை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும். இந்த பணமில்லா பரிவர்த்தனையால் எல்லோரையும் வருமான வரி உச்ச வரம்பிற்குள் கொண்டு வந்துவிட முடியும். இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உடனடியாக எதையும் செயல்படுத்திவிட முடியாது. இது எதைப் பற்றியும் ஆட்சியில் இருப்பவர்கள் சிந்தித்த மாதிரியே தெரியவில்லை.

கருப்புப்பணத்தை ஒழிக்க ஒரே இரவில் 500 ,1000 செல்லாது என அறிவித்த மத்திய அரசால் ஒரே இரவில், மக்களின் வாழ்வாதாரத்தையே சூறையாடும் கல்விக் கொள்ளையையும் , மருத்துவக் கொள்ளையையும் முடிவிற்கு கொண்டு வந்திவிட முடியுமா ? அனைத்து கல்விக்கூடங்களையும் , அனைத்து மருத்துவமனைகளையும் அரசுடைமையாக்கி அனைத்து மக்களுக்கும் சேவையளிக்க முடியுமா ? பணமில்லாததால் ஒரு இந்தியனுக்கு கிடைக்க வேண்டிய கல்வி கிடைக்காமல் போகக்கூடாது. பணமில்லாததால் ஒரு இந்தியனுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதி கிடைக்காமல் போகக்கூடாது. அப்படி ஒரு நிலையை உருவாக்குங்கள். அதற்காக எவ்வளவு இன்னல்களையும் சந்திக்க இந்தியர்களான நாங்கள் தயாராக இருக்கிறோம். இது சாத்தியமா ?  அப்படி ஒரு நிலை வந்தால் எங்களுக்கு செல்வத்தைப் பணமாகவோ, நகையாகவோ, நிலமாகவோ சேர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்காது. சம்பாதிக்கும் பணத்தை அன்றாட செலவுகள் போக மீதியை அரசுக்கே செலுத்தி விடுகிறோம்.

எப்படிப் பார்த்தாலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும், பணமில்லா பரிவர்த்தனை நெருக்கடியாலும் சாமானிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. பெருமளவில் வேலையிழப்புகள் உருவாகி வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் ஒரே ஒரு சாமானியனின் முகத்திலாவது புன்னகையை வரவழைக்க முடியுமா ?
வினை விதைத்தவன் வினை அறுப்பான் !   

குறி சிற்றிதழில் வெளிவந்த எளிய கட்டுரை .

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,
கச்சேரி  பள்ளி எதிரில்   ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :...................................................................................................................................................................Saturday, January 28, 2017

தமிழர்களின் மரபை மீட்போம் !

நாம் கொண்டாடும் பண்டிகைகளில் ஒரே அர்த்தமுள்ள பண்டிகை பொங்கல் மட்டுமே. இந்தியா முழுவதுமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கூட ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்வைத்து , ஒருவரை கொன்றதற்காக கொண்டாடப்படுகிறது. ஆனால் பொங்கல் அப்படியல்ல. எந்த மதத்தையும் முன்வைக்காமல் வாழ்வில் பங்கு பெறும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் ஒரு பண்டிகை தான் பொங்கல். இது , 'பழையன கழிதல் புதியன புகுதல் ' என்று நம் இல்லத்தை மட்டுமல்லாமல் நம் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது.
உலக சக்திகளின் மையமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி செலுத்துகிறோம். பொங்கல் செய்வதற்காக அதில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களிலும் ( பச்சரிசி , வெல்லம் , ஏலக்காய் , முந்திரி , திராட்சை , நெய் ) அர்த்தம் இருக்கிறது. ஒரு மாட்டோட அருமையைப் பற்றி ஒரு விவசாயியிடம் கேட்டுப் பாருங்கள் , தெரியும். மிச்சமிருக்கும் விவசாயிகளை காக்கும் பணியை மாடுகள் தான் செய்து வருகின்றன. அத்தகைய முக்கியத்துவம் வாயந்த மாடுகளுக்கு நன்றி சொல்கிறோம். இப்படி பொங்கல் பண்டிகையின் போது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தமிருக்கிறது.
தீபாவளியை விட பொங்கலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஏராளமான காரணங்கள் உள்ளன. தீபாவளி , விநாயகர் சதூர்த்தியைப் போல திணிக்கப்பட்ட பண்டிகையல்ல பொங்கல். நம் வாழ்வியலுடன் கலந்த பண்டிகை. இனி , முன்பைவிட அதிக உற்சாகத்துடன் பொங்கலைக் கொண்டாட வேண்டும். தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றால் பொங்கலும் வேண்டும்.
சமீப காலங்களில் இந்த வருடம் தான் பொங்கல் பண்டிகை அதிகம் கவனம் பெற்றுள்ளது . காரணம் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு தமிழர்களின் பெருமை தான். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஜல்லிக்கட்டு என்ற ஒன்று மட்டுமே தமிழர்களின் பெருமையல்ல. கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு தமிழர்களின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் சொல்லும் நிகழ்வல்லவா ! அப்படி முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு  நம் கண்முன்னேயே கண்டறியப்பட்டும் இன்று மண்மூடிக் கிடக்கிறது. தமிழுக்கென்று நீண்ட நெடிய வரலாறு இருப்பதாக தொடர்ந்து பெருமிதத்திலேயே உலவுகிறோம். அதைக் காக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
முதலில் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு என்ன மரியாதை இருக்கிறது தமிழகத்தில் ? இங்கு ஒரு பாடமாகக் கூட தமிழ் படிப்பது கட்டாயமில்லை. எந்தவித சங்கடமும் இல்லாமல் தமிழை பிழையாக பேசுகிறோம் , எழுகிறோம் . அரசு தரும் ரசீதுகளில் கூட தமிழ் மொழிக்கு இடமிருப்பதில்லை. "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என்றார் , பாரதியார். இன்று அந்த உணவினை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் தற்கொலை மரணங்கள் கூட நம்மில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. உலகவணிகமயமாக்கலால் எந்தச் சூழலிலும் எந்தப் பொருளும் எங்கும் கிடைக்கும். பணம் மட்டும் இருந்தால் போதும். மற்ற எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை.
 நாம் உண்ணும் ஒரு வாய் உணவில் எத்தனையோ முகம் தெரியா மனிதர்களின் உழைப்பு இருக்கிறது. இதில் முக்கியமானது இரவும் பகலும் ஓயாது உழைத்து உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் உழைப்பு என்பதை மறந்தே போகிறோம்.பொங்கல் என்பதை அறுவடைக்கு நன்றி சொல்லும் திருவிழா தானே. அறுவடைக்கு உதவி செய்யும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அறுவடைக்கு உதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அந்த அறுவடையைச் செய்யும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் அந்த உழவர்களைக் காக்க எதையும் செய்யமாட்டோம்.
கேரளக்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பவர்கள் இந்திய மீனவர்கள் , குஜராத் கடல் பகுதிகளில் மீன் பிடிப்பவர்கள் இந்திய மீனவர்கள் ஆனால் தமிழகக்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பவர்கள் மட்டும் இந்திய மீனவர்கள் என அழைக்கப்படுவதில்லை; மாறாக தமிழக மீனவர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள் மத்திய அரசாலும் , தேசிய ஊடகங்களாலும். தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதியில்லையா ? தமிழகத்தில் வாழ்பவர்கள் இந்தியர்கள் இல்லையா ?
தமிழ் எங்களின் தாய்மொழி , நாங்கள் தமிழர்கள். ஆனால் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதில் இன்றுவரை பெருமிதம் தான் அடைகிறோம். எங்களை இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட வைத்துவிடாதீர்கள். மற்ற மாநிலங்களில் துரத்தப்படும் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகின்றன. கல்பாக்கம் , கூடங்குளம் அணுமின் நிலையங்கள் ,நியூட்ரினோ ஆய்வுமையம் மற்றும் பல. இனிமேலும் எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்க்கப் போகிறோமா ?
தமிழர்களாக நாம் முதலில் செய்ய வேண்டியது பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப்பாடமாக ஆக்குவது. தாய் மொழியின் பெயரிலேயே மாநிலத்தின் பெயரை வைத்திருக்கிறோம். ஆனால் இங்கு பள்ளிகளில் கூட தமிழ் படிப்பது கட்டாயமில்லை. நமக்கு மொழியுணர்வு வந்துவிட்டாலே போதும். நம் உரிமைகள் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். பெரியார் பிறந்த மண் இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகம் , பெரியாரை மறந்து விட்டது. இந்தியா , காந்தியை மறந்து விட்டது.
நாம் வாழும் சூழலுக்கு ஏற்ற உணவு , உடை , இருப்பிடம் , உழவு , வாழ்வு, பண்டிகைகள்  என ஒவ்வொன்றிலும் தமிழர்களின் மரபு என்று ஒன்று இருக்கிறது. அதை அறிய நம் வரலாற்றை நாம் வாசிக்க வேண்டும். காலத்துக்கேற்ற மாற்றத்துடன் ஒவ்வொரு விசயத்திலும் நம் மரபைக் கடைபிடிப்பது தான் நமக்கு உண்மையான பெருமை.
நமது மரபை மீட்டெடுக்க உறுதியேற்போம் !

மேலும் படிக்க :

தொடுதிரை வாழ்வும் சமூக ஊடகங்களும் !

புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !

புகழேந்தி - மக்களின் மருத்துவர் !
..................................................................................................................................................................


Saturday, December 17, 2016

தொடுதிரை வாழ்வும் சமூக ஊடகங்களும் !


நமது இந்த தொடுதிரை வாழ்வில் சமூக ஊடகங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெருகின்றன.முந்தைய அறிவியல் கண்டுபிடிப்புகளை விட மிக விரைவாக பெருவாரியான மக்களை சென்று சேர்ந்திருப்பது தொடுதிரை கைப்பேசி. தலைகுனிந்து வாழ்ந்த மனித இனம் தலை நிமிர்ந்து நடக்க ஆரம்பித்ததை பெரிய சாதனை என்று சொன்னார்கள். ஆனால், அந்த  பரிணாம வளர்ச்சி திரும்பி நடப்பது போல எல்லோரும் திரையைப் பார்த்துக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறோம், நடக்கிறோம், மற்ற வேலைகளையும் செய்கிறோம். “நான் இதுவரை எதற்கும் தலை குனிந்ததில்லை” என்ற மனித இனத்தின் பெருமையெல்லாம் காற்றில் பறக்கிறது. அடுத்த தலைமுறை பிறக்கும் போதே கூன் விழுந்தே பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 
      
கைப்பேசியே ஆச்சரியம் ஏற்படுத்திய சூழலில் தொடக்க காலத்தில் தொடுதிரை கைப்பேசிகள் கவனம் ஈர்க்கவில்லை. சாதாரண கைப்பேசிகளைப் போல தொடுதிரை கைப்பேசிகள் உழைக்காது என்ற அச்சம் முதலில் எல்லோரிடமும் இருந்தது. ஆனால் தொடுதிரையின் வசீகரம் மற்றும் வசதிகள் எல்லோரையும் சாதாரண கைப்பேசிகளை துறக்கச் செய்தன. தொடுதிரை கைப்பேசிகள், சாதாரண கைப்பேசிகள் அளவிற்கு உழைப்பதில்லை அல்லது அவ்வளவு உழைக்க அனுமதிக்கப்படுவதில்லை. எல்லோரும் மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடுதிரை கைப்பேசிகளுக்காக தொடர்ந்து ஒதுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. தொடுதிரை கைப்பேசியின் விலைக்கு அடுத்ததாக செலவு வைப்பது இணைய கட்டணம்.

குடும்ப உறவுகள் மற்றும் சமூக உறவுகளுக்குள் பெரும் பிளவை ஏற்படுத்திய சாதனையை செய்த முதல் சாதனம், தொலைக்காட்சி. தொ(ல்)லைக்காட்சியின் வரவிற்கு முன்புவரை குடும்ப உறுப்பினர்களுடன் பங்கிட்டு கொள்வதற்கும் , தான் சார்ந்திருக்கும் பகுதியில் வாழும் மனிதர்களுடன் நேரடியாக நெருங்கிப் பழகுவதற்கும் நிறைய நேரம் இருந்தது. தொ(ல்)லைக்காட்சியின் வரவு இவற்றை சிதைத்ததுடன் நமது வாழ்க்கை முறைக்கு சற்றும் தொடர்பில்லாத பொருட்களை நமது வீடுகளில் இன்று வரை குவித்துக்கொண்டே இருக்கின்றது. மனித உறவுகளை நோக்கி ஓடுவதற்கு பதிலாக பணத்தை நோக்கி முன்பை விட வேகமாக நம்மை ஓட வைத்து அழகு பார்க்கிறது. எப்படி பார்த்தாலும் தொ(ல்)லைக்காட்சியால் நாம் பெற்றதை விட இழந்தவை அதிகம்.

தொ(ல்)லைக்காட்சிக்கு அடுத்ததாக நம்மை பாதிப்படைய செய்வது தொடுதிரை கைப்பேசிகள். தொ(ல்)லைக்காட்சிக்கு அடுத்த சாதனமான கணினி நமது வாழ்வை இந்த அளவிற்கு பாதிக்கவில்லை. நம் வாழ்வை மேம்படுத்தவே உதவியது. கணினியுடன் இணையம் இணைந்த பிறகு சில பாதிப்புகள் உருவாகின. ஆனால் தொடுதிரை கைப்பேசிகள் மனித இனத்தின் வாழ்வையே பாதிப்படைய செய்து கொண்டிருக்கின்றன. தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்முடன் தொடுதிரை கைப்பேசிகள் இருந்தே ஆக வேண்டும் என்ற அளவிற்கு எல்லோரும் மனநோயாளிகளாகி விட்டோம். நாம் வாழ்வதற்கான நேரத்தை நேரடியாக தொடுதிரை கைப்பெசிகள் எடுத்துக் கொள்கின்றன. நம்மில் எத்தனை பேர் தினமும் ஒரு முறையாவது வானத்தைப் பார்க்கிறோம்.நிலவை, சூரிய உதயத்தை , சூரிய மறைவை அந்த செவ்வான அழகை ரசிக்க எத்தனை பேர் நேரம் ஒதுக்குகிறோம். தொடுதிரை கைப்பேசிகள் வழியாக நாம் எவ்வளவு விசயங்களை தெரிந்து கொண்டாலும், பகிர்ந்து கொண்டாலும் நேரடியாக கிடைக்கும் ஒரு அனுபவத்திற்கு ஈடாகாது.

காலம் பொன் போன்றது என்று சொல்லியே வளர்க்கப்படுகிறோம். ஆனால் அந்த பொன்னான நேரத்தை சமூக ஊடகங்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறோம். முந்தைய தலைமுறை காலை 4 மணிக்கு எழுந்து தினசரி வேலைகளை பார்க்க ஆரம்பித்தது. அடுத்து தலைமுறை காலை 5 மணிக்கு எழுந்தது. தற்போதைய தலைமுறை காலை 6 லிருந்து 7 மணிக்குள் எழுந்திருக்கிறது. தூங்குவதற்கு முன்பும் , எழுந்த பிறகும் செய்யும் முதல் வேலை சமூக ஊடகங்களைப் பார்வையிடுவது தான். புத்தகங்கள் வாசிப்பதற்கும், விளையாடுவதற்கும் மற்ற பொழுதுபோக்குகளுக்கும் ஒதுக்கப்படும் நேரத்தை தொடுதிரை கைப்பேசிகள் எடுத்துக்கொள்கின்றன. பல்வேறுவிதமான செயலிகள் உலகையே உள்ளங்கையில் சுருக்கிவிட்டன. பல செயலிகள் பயன்தரும் வகையில் இருந்தாலும் ஒரு சில செயலிகள் நம்மை அடிமையாக்கிவிடுகின்றன. பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களின் நேரத்தையும் இந்த தொடுதிரை கைப்பேசிகள் எடுத்துக்கொள்கின்றன. ஏற்கனவே தொ(ல்)லைக்காட்சியால் குழந்தைகளின் நேரம் பறிக்கப்பட்ட சூழலில் தொடுதிரை கைப்பேசிகள் அவர்களின் மீதி நேரத்தையும் எடுத்துக் கொள்கின்றன.  

தொடுதிரை கைப்பேசிகள் வாங்கியவுடன் நாம் செய்யும் முதல் காரியம் சமூக வலைத்தளங்களில் நம்மை இணைத்துக் கொள்வது தான். புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துகிறோம். சரியோ சரியில்லையோ நமக்குப்பிடித்த மற்றவர்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்கிறோம். அந்தப்பதிவின் நம்பகத்தன்மை குறித்தோ மற்றவர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்றோ நினைத்துப் பார்ப்பதில்லை. தற்புகழ்ச்சியை செழிப்பாக வளர்த்தெடுப்பது தான் சமூக ஊடகங்களின் முதல் வேலையாக இருக்கிறது. நாம் பகிர்ந்துகொள்ளும் பதிவுகளில் சுயவிளம்பரம் தான் அதிகமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு பயனுள்ள நமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் நாம் பகிர்ந்து கொள்வதில் பல, மற்றவர்களுக்கு பயனற்றதாகவே இருக்கிறது. நமது பதிவுகளுக்கு விழும் லைக் -குகள், அந்த பதிவிற்கு கிடைத்தவையாக எடுத்துக்கொள்ள முடியாது. நாம் பதிவிட்டதற்காக விழும் லைக் –குகளே அதிகம். நமது பதிவை விட நமது முகம் தான் முன்னுக்கு நிற்கிறது.  அதனால் தான் மற்ற பதிவுகளை விட நமது புகைப்பட பதிவுகளுக்கு அதிக லைக்-குகள் கிடைக்கின்றன. 

சமூக ஊடகங்களால் படைப்புத்திறன் குறைகிறது. ஒரு புத்தகம் வாசிக்கும் போது கிடைக்கும் அனுபவத்தில் சிறிதளவைக் கூட சமூக ஊடக பதிவுகள் உருவாக்குவதில்லை.பதிவுகளைப் படிக்கிறோம், பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், அத்துடன் மறந்து விடுகிறோம். நாம் எழுதியது குறித்தோ, நமக்குப்பிடித்த ஆளுமைகள் குறித்தோ , நாம் பின்பற்றும் கோட்பாடு குறித்தோ யாராவது எதிர்மறையாக எழுதினால் உடனே அவர்களுடன் மல்லுக்கு நிற்கிறோம். நம் மீது தவறே இருந்தாலும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே இறுதிவரை வாதிடுகிறோம். ஆனால் நிஜத்தில் நாம் அப்படி நடந்து கொள்வதில்லை. ஒரு மாய உலகையே சமூக ஊடகங்கள் முன்வைக்கின்றன. சமூக ஊடகங்களில் தீவிரமாக எழுதுவதாலோ, சண்டையிடுவதாலோ சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. பெண்ணியம் குறித்து தீவிரமாக எழுதப்பட்ட பதிவை ஆர்வமாக படித்துவிட்டு லைக்-போட்டுவிட்டு, கமெண்ட் எழுதிவிட்டு, சேர் பண்ணிவிட்டு நிஜ உலகத்தில் பிரவேசிக்கும் ஆண்கள் எந்த மாற்றமும் இல்லாமல் பெண்களை அடக்குகிறார்கள்; ஏசுகிறார்கள்.

வெகுஜன ஊடகங்களில் பணிபுரிபவர்கள் கூட ஆணாதிக்க மனநிலையுடன் நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது. சமூகத்தில் யாருக்கு எந்தப் பாதிப்பு  நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கவேண்டியது பொது சமூகத்தின் கடமை. ஆனால், சமூகத்தில் பெண்ணுக்கு ஏதோ ஒரு பாதிப்பு நிகழ்ந்தால் அந்த பாதிப்பிற்கு அப்பெண்ணையே பொது சமூகம் குற்றம் சாட்டுகிறது. அந்த பெண்ணிற்காக நியாயம் கேட்டுப் போராட மகளிர் அமைப்புகள் தான் முன்வர வேண்டும் என்றும் பொதுப்புத்தி யோசிக்கிறது. ஆணாதிக்க ஊடக நடுநிலையாளர்கள், “ ஜீன்ஸ் பேன்ட் அணிவதற்காக போராடிய பெண்ணியவாதிகளும், மகளிர் அமைப்புகளும் ஏன் சுவாதி கொலைக்காக போராட முன்வரவில்லை? “ என்ற மிக மட்டமான கேள்வியை முகநூலில் முன்வைக்கிறார்கள். இதற்கு ஆயிரக்கணக்கில் லைக்-கள் விழுகின்றன. எவ்வளவு மோசமான மனநிலையிது. தினமும் ஆண் ஓட்டுனர்களால் ஆயிரக்கணக்கில் விபத்துகள் நிகழ்கின்றன. இந்த விபத்தில் ஆண் ஓட்டுனரை மட்டும் குறை சொல்லாமல் மற்ற காரணிகளான வாகன பழுது, மோசமான சாலை, வானிலை மாற்றம் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் அதே சமயம் ஒரு விபத்து பெண் ஓட்டுனரால் நிகழும் போது “ என்னைக்கு பொம்பளைக வண்டியோட்ட ஆரம்பிச்சாங்களோ அன்னைக்கு ஆரம்பிச்சது எல்லாம். வண்டிய எடுத்தவுடனே முருக்கிகிட்டு போறாளுக” என்கிறார்கள். என்னவிதமான மனிதர்கள் நாம். பெண்களை குற்றவாளியாக்கி வேடிக்கை பார்க்க ஒட்டுமொத்த சமூகமும் எப்போதும் தயாராகவே இருக்கிறது. சமூக ஊடகங்களால் இந்நிலை துளியும் மாறவில்லை.

கல்விச்சான்றிதழ்களில் , குடும்ப அட்டைகளில் பெயருடன் சாதிபெயர் இல்லாமல் இருப்பவர்கள், சமூக ஊடகங்களில் சாதிப்பெயருடன் இருக்கிறார்கள். முன்பை விட இப்போது தான் அதிகம் சாதி பார்க்கிறார்கள். தங்களது வாகனங்களில் வெளிப்படையாக சாதிப்பெயரையும் ,சாதித்தலைவர்களையும் வெளிப்படுத்துகிறார்கள். சாதிய அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக மக்களை பிரிவுபடுத்துகின்றனர். உலகம் முழுக்கவே பிரிவினைவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போதைய சூழலில் காந்தி, லிங்கன், குவேரா போன்ற பிரிவினைகளைக் கடந்து ஒட்டுமொத்த மக்களுக்காகப் பாடுபடும் உலகளாவிய தலைவர்கள் இல்லாதது தான் காரணம். ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலோ மெர்கில், விக்கிலீக்கிஸ் ஜூலியன் அஜாஞ்சே , அமெரிக்க எட்வர்ட் ஸ்னோடோன் போன்றவர்களைத் தான் உலகளாவிய மனிதர்களாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. கடந்த இருபதாம் நூற்றாண்டில் இதே காலகட்டத்தில்( 1914 - 1918 ) நடந்த முதல் உலகப்போரில் லட்சகணக்காணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நூற்றாண்டிலும் பிரிவினைவாதிகளால் உலகெங்கிலும் மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்த பிரிவினைவாததை சமூக ஊடகங்கள் தடுத்து நிறுத்தவில்லை, மாறாக பிரிவினைவாதத்தை வளர்க்கவே துணை நிற்கிறது.

எந்தவொரு கோட்பாடும் இயக்கமாக உருவாகமல் சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழாது. உலக வணிகமயமாக்கலால் கம்யூனிச கோட்பாடுகள் வலுவிழந்து வரும் சூழலில் புதிய கோட்பாடுகளுக்கான, இயக்கங்களுக்கான தேவைகள் உருவாகியிருக்கின்றன. முன்பை விட பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இயற்கை வளங்கள் பெருமளவு பணமாக்கப்படுவதுடன் மற்ற இயற்கை வளங்களையும் அந்த பணமாக்கும் முறை சிதைக்கிறது. உலக வணிகமயமாக்கலின் பலத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் புதிய இயக்கம் அமைய வேண்டும். இந்த சூழலில் சமூக ஊடகங்களால் பெரிய அளவிலான ஆக்கப்பூர்வமான இயக்கங்களை உருவாக்க முடியவில்லை. அரசியல்வாதிகளையும் , பணக்காரர்களையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் ஒன்றும் செய்யாத சட்டதிட்டங்களை கேலி செய்வதுடன் எல்லாம் முடிந்து விடுகிறது. ஆனால் நிகழ்கால பிரச்சனைகளை மையப்படுத்திய மீம்ஸ்கள் ரசிக்கும்படியாக  உருவாக்கப்படுகின்றன. திரைப்படங்கள், இசை, புத்தகங்கள் மற்றும் கலை குறித்தான பதிவுகள் காட்சி ஊடகங்களாலும், அச்சு ஊடகங்களாலும் புறகணிக்கப்பட்ட சூழலில் சமூக ஊடகங்கள் அதற்கான இடத்தை தருகின்றன. ஆனால் நாம், தொடுதிரை கைப்பேசிகள் வழியாகவும் , சமூக ஊடகங்கள் வழியாகவும் உளவு பார்க்கப்படுகிறோம். சுதந்திரமாக எதையும் செய்ய முடிவதில்லை.

மனிதர்கள் தங்களது மனக்கசடுகளையும், போதாமையையும் , குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கும் இடமாகவே சமூக ஊடகங்கள் இருக்கின்றன. நமது வாழ்வில் பங்குபெற்ற நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும் ,புதிய நண்பர்களைக் கண்டைவதற்கும் சமூக ஊடகங்கள் உதவுகின்றன. ஆனால் சமூக ஊடகங்கள் நம் சமூகத்தில் எந்த பயனுள்ள மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே அவற்றை எடுத்துக்கொள்ள முடிகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல சமூக ஊடகங்களின் கூப்பாடு நாட்டுக்குள் கேட்பதில்லை. எந்த சாதனமும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அந்த சாதனத்தின் கட்டுப்பாடில் நாம் இருக்கக்கூடாது. எல்லா விசயங்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொடுதிரையைத் தாண்டியும் உலகம் இயங்குகிறது. அங்கே ரத்தமும் சதையும் உள்ள எளிய அன்புக்கும், சிறிய பாராட்டுக்கும் ஏங்கித் தவிக்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒன்றே ஒன்று தான். நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விடவும் வாழ்க்கை மிகவும் பெரியது.

குறி எனும் சிற்றிதழில் வெளிவந்த கட்டுரை இது.

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,
கச்சேரி  பள்ளி எதிரில்   ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் ! 

வலுத்தது நிலைக்கும் ! 
...................................................................................................................................................................


                            

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms